Published : 20 May 2017 09:59 AM
Last Updated : 20 May 2017 09:59 AM

விசா நடைமுறை மாற்றங்களால் பெரிய பாதிப்புகள் வராது: அமெரிக்க செனட் உறுப்பினர் தகவல்

அமெரிக்க விசா நடைமுறை மாற்றங்களால் பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை என அமெரிக்க செனட் உறுப்பினர் டெப் பீட்டர்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு, அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தெற்கு டகோடா மாகாண செனட்சபை உறுப்பினர் டெப் பீட்டர்ஸ், டெலாவேர் மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் ஹெலினி எம்.கெல்லி ஆகியோர் தென்னிந்தியாவுக்கு முதன் முறையாக நேற்று முன்தினம் வந்தனர்.

டெல்லி, லக்னோ, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அவர்கள் தொழில்துறையினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டெப் பீட்டர்ஸ், ஹெலினி எம்.கெல்லி ஆகியோர் கூறியதாவது:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விசா நடைமுறையில் தெரிவித்துள்ள மாற்றங்கள் அப்படியே நிகழாது. அமெரிக்காவை பொருத்தவரை ஒரு நபரின் கருத்து சட்டமாக முடியாது. இப்போது மசோதாவை மட்டுமே தாக்கல் செய்திருக்கிறார்கள். இதனை உடனே அமல்படுத்தி விட முடியாது. நீண்ட விவாதத்துக்கு பின்னர்தான் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

அமெரிக்காவின் தெற்கு டகோடா மாகாணத்தில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை 1.8 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. பொருளாதார ரீதியாக தொழிலை மேம்படுத்த எங்களிடம் போதிய மனிதவளம் இல்லை. எனவே, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் எங்களுக்கு வேலைக்கு தேவைப்படுகிறார்கள்.

எனவே, விசாவில் புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்தால் அது தெற்கு டகோடா மாகாணத்தை பாதிக்கும். எனவே, விசா நடைமுறையில் மாற்றங்களை கொண்டுவரும்போது மாகாணத் தின் வளர்ச்சிக்கு எந்தபாதிப்பும் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவிக்க உள்ளோம்.

வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் டெல்லாவேர் மாகாணத்தில் மட்டும் உயர்கல்விக்காக 133 மில்லியன் டாலர்களை செலவழிக்கின்றனர். அது தடைபட்டால் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, விசா நடைமுறையில் பெரிய மாற்றங்கள் வர வாய்ப்பில்லை. விசா தொடர்பாக இந்தியாவில் உள்ள தொழில்துறையினர், மாணவர்கள் எங்களிடம் கூறியுள்ள கருத்துகளை ட்ரம்ப் நிர்வாகத்திடம் தெரிவிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x