

சென்னை: இறந்தவர்களின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க அப்பார்மென்ட் சங்கங்கள் அனுமதிக்க மறுப்பதால், சென்னையில் மாநகராட்சி சார்பில் பிணவறை ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது சென்னையில் ஒரு கோடி பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தனித் தனியாக வீட்டு வசதியை ஏற்படுத்தி தருவது சிரமம் என்ற காரணத்தால், அப்பார்மென்ட் என்று அழைக்கப்படும் என்று அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சென்னையில் முக்கியப் பகுதிகளில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவு கட்டப்பட்டு வருகிறது.
இதுபோன்ற அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பர்களுக்கு, அங்கு செயல்பட்டு வரும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கமாக உள்ளது. இதில் குறிப்பாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏதாவது ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால் இறந்தவரின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க குடியிருப்போர் நலச் சங்கங்கள் அனுமதிப்பது இல்லை என்று கூறப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரின் மகன், மகள் அல்லது உறவினர்கள் வரும் வரை உடலை வைத்திருந்து, அனைவரும் வந்த பின்னர் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வார்கள். சில நேரங்களில் 24 மணி நேரத்திற்கு மேல் கூட உடலை வீட்டில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில், குடியிருப்போர் நலச் சங்கங்கள் நீண்ட நேரம் உடலை வீட்டில் வைத்திருக்க அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் பிணவறை ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னை அண்ணா நகரில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் பிணவறை ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து. ஒரே நேரத்தில் 8 முதல் 10 உடல்களை பாதுகாத்து வைக்கும் வகையில் இந்த பிணவறையை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பிணவறைகள் உள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த பிணவறை அமைக்கப்பட்டால், உள்ளாட்சி அமைப்பு ஒன்று பிணவறை அமைப்பது முதல் முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.