

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் தரிசனம்: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சனிக்கிழமை காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கச் சென்றார். இதற்காக, புது டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
“நகரமயமாதலில் தமிழகம் முன்னிலை” - முதல்வர் ஸ்டாலின்: சென்னையில் கிரிடாய் அமைப்பின் ரியல் எஸ்டேட் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "குடிசையில்லா நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் தலைவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49% மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். நகரமயமாதலில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு: மோசடி பத்திரப் பதிவுகளைத் தடுக்க நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உடன் அன்புமணி சந்திப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ""எம்பிசி பிரிவிலி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை பாமக சார்பில் குழுவாக சந்தித்தோம். தமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் ஆகிய இரண்டு பெரிய சமுதாயங்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு சமுதாயங்களும் தமிழகத்தின் மக்கள் தொகையில் 40 விழுக்காடு. இந்த 40 விழுக்காடு மக்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும்" என்று கூறினார்.
அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன.
உரிய அனுமதியின்றி இந்த ஆசிரமம் நடைபெற்று வருவது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு, இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
ஹரியாணா கொள்ளையர்கள் இருவரும் வேலூர் சிறையில் அடைப்பு: திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஹரியாணா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவரும், குற்றவியல் நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் வரும் மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து, இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
"ஜார்ஜ் சோரஸ் ஓர் ஆபத்தான பணக்காரர்": தொழிலதிபர், முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ் குறித்து, "முழு உலகமும் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை தனது கருத்துக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று விரும்பும் முதியவர், பணக்காரர், கொள்கை பிடிவாதமுள்ள ஆபத்தானவர்" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், “மோடியும் அதானியும் மிக நெருக்கமானவர்கள். அதானி விவகாரத்தில் மோடி அமைதியாக இருக்கிறார். அதானி குழுமத்தின் சரிவு, மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். ஒருவகையில், அது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா வருகை: ‘சீட்டா’ திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட 12 சிவிங்கிப்புலிகள் சனிக்கிழமை மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானநிலையத்தை வந்தடைந்தன. குவாலியர் விமானநிலைத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்திய பிரதேசத்தின் குனோ பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன. ஏற்கனவே 8 சிவிங்கிப்புலிகள் அங்கு விடப்பட்ட நிலையில், தற்போது விடப்பட்டுள்ள 12 சிவிங்கிப்புலிகளுடன் சேர்ந்து மொத்த சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
நிதிஷை பிரதமர் வேட்பாளராக்க தேஜஸ்வி தீவிரம்: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சி தீவிரமாகி உள்ளது. இதற்காக, பிஹாரின் துணை முதல்வரும் லாலுவின் இளைய மகனுமான தேஜஸ்வி பிரசாத் யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்: அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “போதும்.. இந்த வருடத்தின் 48 நாட்களில் இதுவரை 73 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துவிட்டன. பிரார்த்தனைகள் மட்டும் போதாது. துப்பாக்கி வன்முறை ஒரு தொற்றுநோய். நாடாளுமன்றம் இப்போது இதற்கு எதிராக செயல்பட்டே ஆக வேண்டும். நமக்கு தேவையானது துப்பாக்கி சட்டத்தில் திருத்தங்கள்” என்று தெரிவித்துள்ளார்.