மருத்துவர்கள் அனுமதி தந்தால் மட்டுமே கருணாநிதி தொண்டர்களை சந்திப்பது பற்றி முடிவு செய்யப்படும்: ஸ்டாலின்

மருத்துவர்கள் அனுமதி தந்தால் மட்டுமே கருணாநிதி  தொண்டர்களை சந்திப்பது பற்றி முடிவு செய்யப்படும்: ஸ்டாலின்
Updated on
1 min read

கருணாநிதியின் வைரவிழா நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அனுமதி தந்தால் அவர் தொண்டர்களை சந்திப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுகவின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நேற்றைய தினம் நீட் தேர்வு எழுத வந்த மாணவ – மாணவியர் எந்தளவுக்கு துன்பங்களுக்கு துயரங்களுக்கு அவமானப்படுத்தக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை திமுக சார்பில் வன்மையாக கண்டிப்பதுடன், இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாநிதியின் வைரவிழாவில் தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. திமுகவின் செயல் தலைவர் என்ற முறையில் இது தொடர்பாக பல தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவரான கனிமொழி சில தலைவர்களை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார். அதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவமும் இன்றைக்கு பல தலைவர்களை சந்திக்கவிருக்கிறார். இன்னும் சில நாட்களுக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, வைரவிழாவில் யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்பதை ஊடகத்துறையினரை முறையாக அழைத்து அறிவிக்கப்படும்.

தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறது. இருந்தாலும், மருத்துவர்கள் அனுமதி தந்தால் மட்டுமே தொண்டர்களை சந்திப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in