வேளாண் கடன் பெற்ற விவசாயிகளை நிர்ப்பந்திக்க கூடாது: கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க பதிவாளர் ஞானசேகரன் அறிவுறுத்தல்

வேளாண் கடன் பெற்ற விவசாயிகளை நிர்ப்பந்திக்க கூடாது: கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க பதிவாளர் ஞானசேகரன் அறிவுறுத்தல்
Updated on
1 min read

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளைக் கடனை உடனே செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது. அடுத்த உத்தரவு வரும் வரை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் கூடாது என கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே 32 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக, பாதிப்பை போக்கும் வகையில் 2 ஆயிரத்து 247 கோடி ரூபாயை இடுபொருள் மானியமாக தமிழக அரசு அறிவித்தது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் பாதிப்புக்கான இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த படி, ரூ.5 ஆயிரத்து 780 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போதே விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் முதல்வரைச் சந்தித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, வங்கிகளில் கடன்களைச் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இது தவிர, பல்வேறு விவசாய அமைப்புகளும் இது தொடர்பாக புகார் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன், அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கடந்த 5-ம் தேதி சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில், தமிழ கத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வர்த்தக வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற குறுகிய கால விவசாய கடன்கள் மத்திய கால கடன்களாக மாற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது மத்திய கூட்டுறவு வங்கியைப் பொறுத்த வரை ரூ.144 கோடியே 32 லட்சம் மதிப்பிலான குறுகிய கால கடன்கள், மத்திய கால கடன்களாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக விவசாயிகளைச் சேர்க்க வேண்டும். இந்தாண்டு ரூ.7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள விவசாயிகள் எப்போது அணுகினாலும் அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும். இக்கடன்களை வழங்க மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக, விவசாய கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று விவசாயிகளைக் கூட்டுறவு சங்கங்கள் நிர்ப்பந்திக்க கூடாது. அடுத்த உத்தரவு வரும் வரை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பக் கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in