

கரும்புக்கான பரிந்துரை விலையை சேர்த்து தமிழக அரசு, ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தைமுற்றுகையிட முயன்ற விவசாயி கள் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன், மாநிலச் செயலாளர் தங்க காசிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
மத்திய அரசின் வேளாண் விரோதக் கொள்கைகளால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். 9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் விலை தர வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தேசிய கடன் தீர்ப்பாயத்துக்கு சென்றுள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 தனியார் சர்க்கரை ஆலைகள், விவசாயிகள் பெயரில் கடனை வாங்கி ரூ.400 கோடிக்கு மேல் எடுத்துக் கொண்டு விவசாயிகளை கடனாளிகளாக்கி விட்டனர்.
தேசிய கடன் தீர்ப்பாயம் இந்த ஆலைகளை ஏலம் விடுவதற்கு முன்பாக, விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.400 கோடி கரும்பு பண பாக்கியை வட்டியுடன் முழுவதுமாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், 9.5 சதவீதம் பிழிதிறன் கரும்பு ஒரு டன்னுக்கு 2022-23-ல் ரூ.2,821 மட்டுமே விலையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள், மத்திய அரசு அறிவித்த தொகையுடன் ஒரு டன் கரும்புக்கு ரூ.620 மாநில அரசு விலையாக வழங்கி வருகின்றன.
தமிழகத்திலும் கரும்புக்கான பரிந்துரை விலையை சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம்வழங்கிட வேண்டும். மூடப்பட் டுள்ள ஆலைகளைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தியபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காகப் புறப்பட்டனர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.