ஐஐடி பேராசிரியர் 5 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம் - பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி

திருநெல்வேலியில் சைக்கிள்  பயணம் மேற்கொண்ட கிரண் சேத். படம்: மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட கிரண் சேத். படம்: மு. லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி: டெல்லி ஐஐடி இயந்திர பொறியியல் துறை பேராசிரியராக பணிபுரிந்தவர் கிரண் சேத்(73). இந்திய பாரம்பரியத்தையும், தன்னார்வ உணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் கடந்த1977-ம் ஆண்டில், ஸ்பிக்மேகே என்ற அமைப்பை இவர் ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த அமைப்பின்மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 800 இடங்களில் கருத்தரங்குகள், பாரம்பரிய கலைநிகழ்வுகள், இசை விழாக்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தியுள்ளார். இது ஒரு மக்கள் இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆக.15-ம் தேதி காஷ்மீரில் நகரில் இருந்து கன்னியாகுமரிக்கு விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை கிரண்சேத் தொடங்கினார். தனது பயணத்தின்போது வழியில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அமைச்சர்கள், நன்கொடையாளர்கள், ஊடகவியலாளர் உள்ளிட்ட பலரை சந்தித்து பேசினார்.

திருநெல்வேலியில் கடந்த 2 நாட்களாக பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை சந்தித்து பேசினார். கியர் இல்லாத, ஆடம்பரமற்ற, ஜிபிஎஸ் வசதியற்ற சைக்கிளில் தேசியக்கொடி, குறைந்த எண்ணிக்கையில் பொருட்களுடன், தினமும் 50 முதல் 80 கி.மீ. தூரம் பயணிக்கிறார்.

கிரண்சேத் கூறும்போது, “எனது குழந்தைப் பருவத்திலிருந்தே யோகா செய்வதால் இந்த சவாலான பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. சைக்கிள் ஓட்டுவதை ஒரு தியானமாக கருதுகிறேன். இந்திய கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் ஒவ்வொருவரும் போற்ற வேண்டும். அதை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஊக்குவிக்கவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

சைக்கிள் பயணத்துக்கான நோக்கம் குறித்து ஸ்பிக்மேகே அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய கண்ணன் கூறும்போது, “இந்திய பாரம்பரியத்தை பாதுகாக்கவும், எளிமையான வாழ்க்கை மற்றும் உயர் சிந்தனை பற்றிய மகாத்மா காந்தியின் சிந்தனைகளை விதைக்கவும் இந்த சைக்கிள் பயணத்தை டாக்டர் கிரண் சேத் மேற்கொண்டுள்ளார்” என்றார்.

திருநெல்வேலி ஜெயேந்திரா பள்ளிமாணவர்களிடம் பேசிய கிரண்சேத், எந்த ஒரு விஷயத்திலும் உத்வேகமும், ஆழ்ந்த கவனமும் இருக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் கிருஷ்ணகிரிக்கு கடந்த 10-ம் தேதி வந்த அவர், நாளை (19-ம் தேதி) கன்னியாகுமரியில் தனது சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in