மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள்
Updated on
1 min read

கோவை மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையே ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை கால வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்பட உள்ள திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06030) வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை வியாழக்கிழமைதோறும் திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இதேபோல, மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06029), வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளிக்கிழமைதோறும் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில்கள் செல்லும் வழியில் கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாதங்களில் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட ரயிலில் 15,189 பேர் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரூ.69.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையிலான ரயிலில் 18,978 பேர் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரூ.86.54 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இரு மார்க்கங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.1.56 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவலறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தென்காசி பாண்டியராஜா கூறும்போது, “இந்த சிறப்பு ரயில்கள் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. தென்மாவட்ட மக்களுக்கும் இந்த ரயிலில் பயணிப்பதற்கான தேவை உள்ளது. எனவே, இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in