

தமிழக அரசு அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் ஆட்டோக்களுக்கு இன்னும் ஜிபிஎஸ் டிஜிட்டல் மீட்டர் வழங்கப்படவில்லை என ஆட்டோ தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி அறிவித்தது. அதன்படி, 1.8 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, மேலும், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12 கட்ட ணம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண முறை தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் ஆட்டோக்களுக்கும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தினால், பொதுமக்கள் பயணம் செய்யும் தூரம், கட்டணம் விவரம் ஆகியவற்றை துல்லியமாக காட்டும். மேலும், ஒட்டுமொத்த விவரங்களும் ரசீதாக (பிரின்ட் அவுட்) வந்துவிடும். இதை மீறி ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது. பொதுமக்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசி ஓட்டுவதைத் தடுக்க முடியும். ஆனால், ஆட்டோக்களுக்கான ஜிபிஎஸ் டிஜிட்டல் மீட்டர்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. இதேபோல், கட்டணத்தை மாற்றியமைக்கும் முத்தரப்பு கமிட்டியும் அமைக்கவில்லை என ஆட்டோ தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறும் போது, ‘‘ஆட்டோக்களுக்கான பதிவுமற்றும் புதுப்பிப்பு கட்ட ணம், இன்சூரன்ஸ் கட்டணம், பெட்ரோல் விலை உள்ளிட்டவை உயர்ந்துள்ளதால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மக்களிடம் துல்லியமாக வசூலிக்கும் வகையில் ஜிபிஎஸ் டிஜிட்டல் மீட்டர் வழங்குவதாக அறிவித்தது.
இதேபோல், கட்டணத்தை மாற்றியமைக்கும் வகையில் முத்தரப்பு கமிட்டி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரையில் வழங்கவில்லை. இதனால், தொழிலாளர் தினத்தில் எங்களைப் போன்ற ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி இல்லை’’ என்றார்.
விரைவில் ஜிபிஎஸ் மீட்டர்
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘ஆட்டோக்களுக்கு ஜிபிஎஸ் மீட்டர்கள் வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.