

கிருஷ்ணகிரியில் கடித்த பாம்புடன் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள ஜபேதார்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). நேற்று காலை இவர் தன் வீட்டு அருகே கோழி ஒன்றை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். புதரில் பதுங்கிக் கொண்ட கோழியை அவர் தேடிச்சென்றபோது ஏற்கெனவே அங்கு பதுங்கியிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை கவனிக்காமல் மிதித்துள்ளார்.
உடனே அந்தப் பாம்பு மணிகண்டனின் காலில் கடித்துள்ளது. பாம்புக் கடிக்கு சிகிச்சை பெற கிருஷ்ணகிரி யில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, அவரைக் கடித்த மலைப்பாம்பையும் சாக்குப் பையில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார். இதைக்கண்டு மருத்துவமனையில் இருந்தவர் கள் அலறினர்.
பின்னர், பாம்பு பற்றியத் தகவலை வனத்துறையினருக்குத் தெரிவித்துவிட்டு மணிகண்டனை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர். அதில், பாம்புக் கடியால் மணிகண்டன் உடலில் விஷம் கலக்கவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடித்த பாம்புடன் இளைஞர் மருத்துவமனைக்கு வந்த தகவல்அறிந்த அப்பகுதி மக்கள் பலர் அங்கு திரண்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் அந்தப் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.