

வேளாண் விளைபொருட்களுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் எழுத்து மூலம் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உணவு படைக்கும் கடவுள்களாக போற்றப்படும் விவசாயிகளின் துயரங்களை மத்திய, மாநில அரசுகள் தீர்க்கத் தவறிவிட்ட நிலையில், அந்தப் பொறுப்பை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டதாக தோன்றுகிறது. விவசாயிகள் நலன் குறித்த 2 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு, வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு பெருமளவில் உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்பது குறித்து இம்மாதன் 8-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க திபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ஆணையிட்டது.
அதேபோல், விவசாயிகளின் துயரத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு, விவசாயிகளின் துயரத்தைப் போக்க பயிர்களின் குறைந்தபட்ச விலையை உயர்த்துவது உள்ளிட்ட யோசனைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி ஆணையிட்டது. இரு அமர்வுகளும் பிறப்பித்த ஆணைகள் விவசாயிகள் நலன் சார்ந்தவை என்பதில் ஐயமில்லை.
உண்மையில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலை குறித்து விவசாயிகளிடம் தேவைக்கும் அதிகமாகவே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை தான் நியாயமான அளவில் இல்லை. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்து 11 ஆண்டுகளாகியும் அது ஏற்கப்படவில்லை.
ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1549 செலவாகும்; ஒரு டன் கரும்பு விளைவிக்க ரூ.2450 செலவாகும் என கோவை வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது. அத்துடன் 50% லாபம் சேர்த்து ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2324 ரூபாயும், ஒரு டன் கரும்புக்கு 3675 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கினால் விவசாயிகள் யாரிடமும் கையேந்த வேண்டியிருக்காது. ஆனால், இதில் பாதியளவைக் கூட மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை எட்டாதது கொடுமை.
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை செயல்படுத்தப்படாத நிலையில், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதற்காக கடந்த 01.04.2013 அன்று டெல்லியிலுள்ள தேசிய வேளாண்மை பொருளாதாரம் மற்றும் கொள்கை நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் சந்த் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அக்குழுவின் அறிக்கையில், ''விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்களின் தலைவரை திறன்பயிற்சி பெற்ற ஊழியராக கருதி, பயிரை சாகுபடி செய்ய எத்தனை நாட்கள் அவர் உழைக்கிறாரோ, அத்தனை நாட்களுக்கும் திறன்பயிற்சி பெற்ற ஊழியருக்கான ஊதியத்தை கணக்கிட்டு, அதை பயிர்சாகுபடிக்கான செலவில் சேர்க்கப்பட வேண்டும்.
சாகுபடிக்காக செய்யப்படும் முதலீட்டின் மீதான வட்டி, நிலத்திற்கான வாடகை, வேளாண்மைக்காக உருவாக்கப்படும் கட்டமைப்புகளின் தேய்மானம் ஆகியவையும் உற்பத்திச் செலவில் சேர்க்கப்பட வேண்டும். இத்தகைய செலவுகளுடன் லாபம் சேர்த்து தான் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பரிந்துரை செய்யப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அவற்றை பரிசீலிக்கக்கூட அரசு முன்வரவில்லை.
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதில் மத்திய அரசின் அக்கறை இந்த அளவில் இருந்தால், மாநில அக்கறையோ இன்னும் மோசமாக இருக்கிறது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், ''நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்; கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்'' என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஆண்டில் கரும்புக்கான கொள்முதல் விலை ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. முந்தைய ஆண்டின் விலையான ரூ.2850 ஆகவே நீடிக்கிறது. முந்தைய 5 ஆண்டுகளில் மாநில அரசின் பரிந்துரை விலையை ரூ.200 குறைத்து விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை செய்தது ஜெயலலிதா அரசு. அதுமட்டுமின்றி, இந்த விலையைக்கூட சர்க்கரை ஆலைகள் முறையாக விவசாயிகளுக்கு வழங்காமல் ரூ.1569 கோடி நிலுவை வைத்திருக்கின்றன. இதை விவசாயிகளுக்கு வசூலித்துத் தர மத்திய, மாநில அரசுகள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. அதேபோல், நெல்லுக்கான கொள்முதல் கடந்த ஆண்டில் பெயரளவில் ரூ.60 மட்டுமே உயர்த்தப்பட்டது.
இந்தியாவில் அமைப்பு சார்ந்த பணியாளர்களின் ஊதியம் ஆண்டுக்கு சராசரியாக 16% உயருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆண்டுக்கு 3 முதல் 4% வரை மட்டுமே உயர்த்தப்படுகிறது. சில ஆண்டுகளில் அதுவும் உயர்த்தப்படுவதில்லை. இதனால்தான் விவசாயிகள் கடனாளிகள் ஆகின்றனர்; கடன் எல்லை மீறும் போது தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கைகளில் தான் உள்ளது.
விவசாயிகள் நலன் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தமுறை விசாரணைக்கு வரும்போது வேளாண் விளைபொருட்களுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது குறித்த சுவாமிநாதன் குழு, ரமேஷ் சந்த் குழு ஆகியவற்றில் எது சிறந்ததோ அதை செயல்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தயாராக இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் எழுத்து மூலம் உறுதிமொழி அளிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.