

ஈரோடு: கடந்த 33 ஆண்டு கால அதிமுக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்துள்ளது. அதிமுகவுக்கு மதமோ, சாதியோ கிடையவே கிடையாது, என ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, நேற்று ஈரோடு கனிராவுத்தர் குளம், பிராமண பெரிய அக்ரஹாரம், வண்டிப்பேட்டை பகுதிகளில் அவர் பேசியதாவது: மின்கட்டண உயர்வு, குடிநீர், சொத்துவரி உயர்வுதான் திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது. விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கனவில்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவை உயர்த்துவதாக அறிவிக்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி இஸ்லாமியர்களுக்கு அரணாக, பாதுகாப்பாக இருந்துள்ளது. 33 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. அதிமுகவுக்கு மதமோ, சாதியோ கிடையவே கிடையாது. 100 சதவீதம் மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக.
அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. வக்பு வாரிய மானியம், உலமாக்கள் ஓய்வூதியம் உயர்வு, பள்ளிவாசல் புதுப்பிக்க நிதி, ஹஜ் பயண மானியம் உயர்வு, உமறுப்புலவர் பெயரில் அரசு விருது, காயிதே மில்லத்துக்கு அரசு விழா எடுக்கப்பட்டதோடு, மணிமண்டபம் என அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசியல் சார்ந்து அவ்வப்போது கூட்டணி அமைக்கப்படும். அரசியல் சூழ்நிலைக்காக, வெற்றி பெறுவதற்காக கூட்டணி வைப்பார்கள். ஆனால், கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்கள் கொள்கைகளை எவராலும் அழிக்க முடியாது. எப்போதும் மதத்துக்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அதிமுக என்றார்.