

ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இதுவரை 40 சதவீத வணிகர்கள் மட்டுமே இணைந்துள்ளனர் என்று வணிக வரித்துறை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் தெரிவித்தார்.
இந்திய செலவின கணக் காளர்கள் நிறுவன தென்னிந்திய மண்டல கவுன்சில் சார்பில் மண்டல செலவின கருத்தரங் கம் சென்னையில் நேற்று நடை பெற்றது. இந்த கருத்தரங்கை சென்னை மண்டல சேவை வரித் துறை முதன்மை ஆணையர் சி.பி. ராவ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:
மத்திய அரசு இயற்றியுள்ள ஜி.எஸ்.டி. வரி சட்டம் புரட்சி கரமானது. இதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு இருக்கும். கடந்த காலங்களில் மத்திய வரி விதிப்பு மற்றும் மாநில வரி விதிப்புக்கு இடை யில் இடைவெளி இருந்தது. வசூலாகும் வரியில் அவரவர் பங்கு போய் சேர்வதில் சிக்கல் இருந்து வந்தது.
ஜி.எஸ்.டி. மூலம் பொருள் சந்தைக்கு வரும் முன்னரே வரி (உற்பத்தி வரி) விதிப்பு இருக் காது. இதற்கு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநி லங்களாக தமிழகம், மகாராஷ் டிரம், குஜராத் ஆகிய மாநி லங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது அவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதேபோல ஒவ்வொரு முடிவையும் மாநில அமைச்சர்கள், மத்திய அமைச் சர்கள் அங்கம் வகிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் குழுவி லேயே எடுக்க முடியும்.
இது உலகில் எங்கும் இல்லாத சிறப்பு. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக வரி வசூல் செய்த தால் நிர்வாகத்தில் சிரமம் இருந்து வந்தது. அது களையப்படும். அதேவேளையில் மாதத்துக்கு 3 முறை சேவை வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது சிரமமாக இருக்கும். இது தொடர்பாக பொதுமக்களுக்கு உதவ வேண்டும். தற்போது வரை ஜி.எஸ்.டி. இணையதளத்தில் 40 சதவீத வணிகர்கள் மட்டுமே இணைந்துள்ளனர்.
பல வழிகளில் விளம்பரங்கள் செய்தும் 60 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இணையவில்லை. இதுகுறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.