

வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 2 உயர்நிலை மேம்பாலங்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் பெயரை சூட்ட வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: மாநகரில் நெரிசலை குறைக்க வைகை ஆற்றின் இருந்த இரு தரை பாலங்களை அகற்றிவிட்டு அதே இடத்தில் ரூ.30.60 கோடியில் உயர்நிலை பாலங்களாக கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் ஜெயலலிதா மதுரைக்கு அளித்த கொடை. முதல்வருக்கு நன்றிக் கடனாக ஆரப்பாளையம், அருள்தாஸ்புரத்தை இணைக்கின்ற உயர்நிலை பாலத்துக்க்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும். யானைக்கல்- செல்லூர் பகுதியை இணைக்கும் பாலத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த தருணத்தில் இந்த பாலம் திறப்பு விழா நடப்பதும், அதற்கு மறைந்த முதல்வர்கள் பெயர்களை சூட்டுவதும் பெருமை. இந்த கோரிக்கையை மதுரை மக்களின் சார்பாக வைக்கிறேன். அதனால், அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார்.
வி.வி.ராஜன்செல்லப்பா மேயராக இருந்தபோதுதான், இந்த மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.