Published : 17 Feb 2023 04:00 AM
Last Updated : 17 Feb 2023 04:00 AM
சென்னை: அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி ரூ.1 கோடி கேட்டதாகக் கூறி, அது குறித்த ஆடியோவை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கால கட்டத்தில் சசிகலாவை கடுமையாக விமர்சித்து வந்தவர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. வட மாவட்டத்தில் அதிமுகவில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகராகவும் உள்ளார்.
2017-ம் ஆண்டு சசிகலா முதல்வராகப் பொறுப் பேற்பதற்கான வேலைகள் தீவிரமடைந்த போது, சசிகலாவின் வலியுறுத்தலால் முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தத்தைத் தொடங்கினார். அந்தச் சூழலில் ஓபிஎஸ் அணியில் கே.பி.முனுசாமி இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், சொத்து குவிப்புவழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. சில மாதங்களில் பழனிசாமி அணியும் சசிகலாவுக்கு எதிராகச் செயல்பட்டது. பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தன. இரட்டை தலைமையில் கட்சி செயல்பட்டு வந்தது.
இதற்கிடையே கட்சியில் ஒற்றைத் தலைமைசர்ச்சையால் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. இப்போது இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது ஓபிஎஸ்-யும் விமர்சித்து வந்தார். இந்நிலையில் பன்னீர் செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி என்பவர், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள பன்னீர் செல்வம் இல்லத்தில் நேற்று 2 ஆடியோக்களை வெளியிட்டார்.
அதில் ஒன்று முனுசாமியுடன் பேசியது, மற்றொன்று முனுசாமியின் ஓட்டுநருடன் பேசியது எனவும் தெரிவித்தார். அந்த ஆடியோவில், தான் 50 (ரூ.50 லட்சம்)தயார் செய்து விடுவதாகவும், மாலைக்குள் மேலும் 50 தயார் செய்து விடுவதாகவும் கிருஷ்ண மூர்த்தி கூறுகிறார். எதிர்தரப்பில் பேசுபவர், தன் மகனை அனுப்பி வைப்பதாகவும், ஒரு ரூபாய் (ரூ.1 கோடி) கொடுத்து விடுமாறும் தெரிவிக்கிறார்.
ஆடியோவை வெளியிட்டு, கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பன்னீர் செல்வம் குறித்து கே.பி.முனுசாமி அவதூறாகப் பேசி வருகிறார். அவர் உத்தமர் இல்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காகத்தான் இந்த ஆடியோவை வெளியிட்டேன்.
தொடர்ந்து பேசினால் வீடியோவும் வெளியிடுவேன். என்னைப் போல பலர் கட்சிப் பதவிக்காகவும், எம்எல்ஏ சீட்டு கேட்டும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவர்கள் அனைவரும் புகார்தெரிவிக்க வேண்டும். ஓரிரு நாட்களில் எனக்கு பதில் வராவிட்டால் வீடியோ வெளியிடுவேன்.
கே.பி.முனுசாமி குடும்பத்துக்காகத்தான் உழைப்பார். அதிமுகவில் பணம் கொடுத்தால் பதவி என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT