

சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. நிர்வாக வசதிக்காக 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் இடம்பெற்றுள்ளன. மாநகராட்சி முழுவதும் தினமும் 5,500 டன் குப்பை உருவாகின்றன. அவற்றை வீடு வீடாக சேகரித்து, லாரிகளில் ஏற்றி, குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்வது வரையிலான பணியில் 7,600 நிரந்தர தொழிலாளர்கள் உள்பட 19,315 துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஒருசில இடங்களில் குப்பை தேக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதையும் துரிதமாக அகற்றும் நோக்கில் சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம் சார்பில் சிறப்பு படை ஒன்று உருவாக்கப்பட்டு, குப்பை அகற்றப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் களின் பணி, காலை 6 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவடைகிறது. இவர்களுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய பணிகள் ஒதுக்கப்படுகின்றன. அதை செய்யவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர், நேரு விளையாட்டரங்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் மக்கள் கூடும் பகுதிகளாக உள்ளன. அதனால் அங்கு குப்பை அதிகமாகிறது. ஒரு விளையாட்டு நிகழ்ச்சி, விழிப்புணர்வு ஓட்டம் என நடைபெற்றால், குப்பை அதிகமாக உருவாகும். இதனால் அப்பகுதியில் தேங்கிய குப்பையை அடுத்த நாள்தான் அகற்ற வேண்டியிருக்கும். சில பகுதிகளில் குப்பை தேங்கி இருப்பதாக புகார் வந்தாலும், நடவடிக்கை எடுக்க முடியாது.
அதனால் ஒரு மேற்பார்வையாளர், 20 துப்புரவுத் தொழிலாளர்களைக் கொண்டு சிறப்பு படை ஒன்றை அமைத்திருக்கிறோம். பிற்பகலுக்கு மேல் குப்பை தொடர்பாக ஏதேனும் புகார் வந்தாலோ, பொது மக்கள் அதிகம் கூடுவதால் அங்கு குப்பை அதிகமானாலோ, சிறப்பு படையைக் கொண்டு குப்பை அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.