

ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிட்கோ தொழில்பேட்டை மேலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த வாயஸ் ஆஃப் நேச்சர் அமைப்பின் தலைவர் ஆர்.கோகுல்ராஜ், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழக (சிட்கோ) தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதில் பல்வேறு ரசாயன மற்றும் மருந்து தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த சிட்கோ தொழில்பேட்டை வளாகத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் படவில்லை. அதனால் பெரும் பாலான நிறுவனங்கள் கழிவுநீரை சுத்திகரிக்காமல், அந்த வளாகம் வழியாகச் செல்லும் கால்வாயில் விடுகின்றன. அந்த கழிவுநீரானது, அருகில் உள்ள ‘தண்ணீர் குளம்’ என்ற ஏரியில் கலக்கிறது. அந்த ஏரி, அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. அதில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களைக் கொண்ட கழிவுநீர் கலப்பதால், நீராதாரம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. எனவே, சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து கழிவுநீர் வெளியேறு வதைத் தடுக்க, அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
இதை விசாரித்த அமர்வு, சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “தற்போது பருவமழை தொடங்க உள்ளது. ஏரிக்கு மழைநீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இதுவரை சிட்கோ தொழில்பேட்டை வளாகத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. அதை அமைக்க உடனடியாக உத்தரவிட வேண்டும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, சிட்கோ மேலாளர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராகி, இதுவரை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.