Published : 17 Feb 2023 04:13 AM
Last Updated : 17 Feb 2023 04:13 AM

நிர்வாகி தாக்கப்பட்டதாக டிஜிபியிடம் பாஜக புகார்

நாராயணன் திருப்பதி | கோப்புப் படம்

சென்னை: பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, டிஜிபி அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக பட்டியலின மாநிலத் தலைவர் தடா பெரியசாமி, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறையில் வசித்து வருகிறார். கடந்த 14-ம் தேதி இரவு அவரது வீட்டுக்கு வந்த சிலர், அவரது வீட்டின்மீது கல் வீசி தாக்குதல் நடத்தி, அவரது வாகனத்தையும் சேதப் படுத்தியுள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் தடா பெரியசாமி புகார் அளித்துள்ளார். புகாரின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காததால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “தடா பெரியசாமி வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் விசிக-வினராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கெனவே, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விசிக மாவட்டச் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் காவல் துறையினரைத் திட்டி கோஷமிட்டனர். எனவே, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் விசிக-வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனுவை பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, டிஜிபி சைலேந்திர பாபுவிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன் திருப்பதி, “பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மீது விசிகவினரும், திமுகவின் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாஜக பட்டியலினத் தலைவர் தடா பெரியசாமியின் வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை 2 நாட்கள் ஆகியும் காவல்துறை இன்னும் கண்டு பிடிக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி சம்பவம்: இதனிடையே நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், “கிருஷ்ணகிரியில் ஒரு ராணுவ வீரர் திமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று திமுக கடந்து செல்ல முயல்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நமக்காக சேவை புரிந்த ஒருவரை அடித்தே கொலை செய்திருப்பது கொடூரம். இச்சம்பவத்துக்கு முதல்வர் குரல் கொடுக்காமல் அமைதி காப்பது ஏன்? அதிகாரம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவத்தில் திமுகவினர் செயல்படுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இதை உணர்ந்து தன் கட்சியினருக்கு புரியும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழகம் வன்முறைக் காடாகும்” எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x