Published : 17 Feb 2023 04:10 AM
Last Updated : 17 Feb 2023 04:10 AM
சென்னை: சென்னை மாநகராட்சியின் 122-வது வார்டு கவுன்சிலர் ஷீபா வாசு (75) மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளை உள்ளடங்கிய 122-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷீபா வாசு(75). அவர் உடல்நலக் குறைவால் நேற்று காலை காலமானார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டை, செனோடாஃப் சாலை, 1-வது லேன் பகுதியில் பைகிராப்ட்ஸ் நகர், எண். 28-வது என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கி நந்தனத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஷீபா வாசுவின் மகன் வி.பிரபு குமார். இவர் முதல்வர் அலுவலகம் மக்கள் தொடர்பு துறை துணை இயக்குநராக உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஷீபா வாசு உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். மக்கள் பணியாளராகவும், கட்சியின் செயல் வீரராகவும் இருந்து சிறப்புறப் பணியாற்றி வந்த அவரது மறைவு பெரிதும் வேதனையளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், 122-வது வார்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT