

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் 3-வது வழித் தடத்தில் பசுமை வழிச் சாலை - அடையாறு சந்திப்பு வரை சுரங்கம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
‘காவேரி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக சுரங்கப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இது அடையாறு ஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்தை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் வந்தடையும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்டம்,
முதல் கட்டம் நீடிப்பு திட்டத்துக்குப் பின்பு, விமான நிலையம் - விம்கோ நகர் வரையும், பரங்கிமலை- சென்னை செண்ட்ரல் வரையும் 2 வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித் தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப் படுகிறது.
சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், மாதவரம்-சிறுசேரி வரை 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 1.4 கி.மீ. தொலைவுக்கு முதல் சுரங்கம் தோண்டும் பணியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அதே வழித்தடத்தில் சென்னை பசுமைவழிச்சாலை ரயில் நிலையம் அருகில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நேற்று தொடங்கின. பசுமைவழிச்சாலை நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. தொலைவுக்குச் சுரங்கம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 3-வது வழித் தடத்தில் கெல்லிஸ் முதல் தரமணி வரை 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த பாதையில் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை ஹெர்ரென்க்னெக்ட் நிறுவனம் தயாரித்தது. சுரங்கப்பாதை திட்டங்களில் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு பெயரிடும் வழக்கம் உள்ளது. அந்த வகையில், 3-வது வழித்தடத்தில் இயக்கப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்துக்கு ‘காவேரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் முக்கியமாக டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்தை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றுப் படுக்கையில் இருந்து 7 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
இது மிகவும் சவாலான பணியாக இருக்கும். இதற்காக, நாங்கள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகிறோம். பசுமை வழிச் சாலையில் இருந்து இயக்கப்படும் அடுத்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்துக்கு ‘அடையாறு’ என்று பெயரிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.