

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் சங்கர் (24).
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், குடிப்பழக்கம் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மறு வாழ்வு மையத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, பல் துலக்கு வதற்கு பயன்படுத்தப்படும் டூத் பிரஷ், ஜிப், துணி, பிளாஸ்டிக் இழைகள் போன்று உண்ண தகாத பொருட்களை உண்டுள்ளார்.
இதன் காரணமாக இரண்டு மாத காலமாக கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதற்காக பல்வேறு தனியார் மருத்துவமனைக்கு சென்றும் வயிற்று வலிக்கு தீர்வு காணப்படாத நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேவையற்ற பொருட்கள் அகற்றம்: பின்னர் சிடி ஸ்கேன் மற்றும் உள் நோக்கியியல் (endoscopy) செய்து சங்கரின் வயிற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் வயிற்றில் டூத் பிரஷ், பிளாஸ்டிக் குச்சி, சில கிழிந்த துணி, பேன்ட் ஜிப் போன்ற பல்வேறு பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினரின் ஆலோசனைப் படி கடந்த 2-ம் தேதி செங்கல்பட்டு பொது அறுவை சிகிச்சை மருத்துவர்கள், சங்கரின் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இரைப்பையிலிருந்த தேவையற்ற பொருட்களை அகற்றினர். இதைத் தொடர்ந்து சங்கர் நல்ல நிலையில் உள்ளதாகவும், அவருக்கு தற்போது மன நல சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.