தமிழகம்
2022-ல் சென்னை ரயில்வே கோட்ட ரயில் நிலையங்களில் 759 சிறுவர்கள் மீட்பு
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஆண்டில் மட்டும் 759 சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் இருந்து கோபித்துக் கொண்டும், ஆதரவில்லாத மற்றும் காணாமல் போன சிறுவர்களை கண்டறிந்து மீட்பதற்கான முயற்சியை ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, குழந்தைகள் மீட்பு இயக்கத்தை நாடு முழுவதும் ரயில்வே துறைசெயல்படுத்தி வருகிறது. முக்கியமான ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 759 சிறுவர்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
