

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவிகளின் சொந்த ஊரான பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் இருந்து 15 மாணவிகள், திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியில் நேற்று முன்தினம் தொடங்கிய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர். இவர்களை அதே பள்ளி ஆசிரியர்கள் கோ.ஜெபசகேயு எப்ராகிம், சி.திலகவதி ஆகியோர் அழைத்துச் சென்றனர்.
இதில், கால்பந்து போட்டியில் பங்கேற்ற பின், பிலிப்பட்டி பள்ளி மாணவிகளை, கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையை பார்ப்பதற்காக ஆசிரியர் ஜெபசகேயு எப்ராகிம் அழைத்துச் சென்றார். அங்கு காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றபோது மாணவிகள் வி.சோபியா(12), ஆர்.தமிழரசி(13), பி.லாவண்யா(11), எம்.இனியா(11) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அதன்பின், 4 மாணவிகளின் உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு மாணவிகளின் உடல்களுக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது, அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் வீதம் காசோலை வழங்கப்பட்டது.
இதேபோல, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏவும் அஞ்சலி செலுத்தினார். மாணவிகள் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தால் பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும், மாணவிகள் பயின்ற பள்ளிக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கைது: பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, ஆசிரியர்கள் ஜெபசகேயு எப்ராகிம், சி.திலகவதி ஆகியோர் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், மாணவிகளை குளிக்க அழைத்துச் சென்ற ஆசிரியர் ஜெபசகேயு எப்ராகிமை மாயனூர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து குளித்தலை கிளைச் சிறையில் அடைத்தனர்.
3 பேரை காப்பாற்றிய மாணவி சோபியா: இந்த சம்பவம் குறித்து விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற மாணவிகள் பவினா, கோகிலா ஆகியோர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கண்ணீர் மல்க கூறியது: பள்ளியில் இருந்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளோம். ஆசிரியர் ஜெபசகேயு எப்ராகிம் தனது சொந்த செலவிலேயே எங்களை விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார்.
தோளூர்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை. எனினும், பங்கேற்பு சான்றிதழ் இரவில்தான் கிடைக்கும் என்பதால், மாயனூர் தடுப்பணையை பார்ப்பதற்காக ஆசிரியர் ஜெபசகேயு எப்ராகிம் எங்களை காரில் அழைத்துச் சென்றார். அப்போது, காவிரி ஆற்றில் குளிக்கலாம் என நாங்கள் கூறியபோது, ஆற்றில் இறங்கி ஆழம் பார்த்துவிட்டு வருவதாகவும், அதுவரை கரையில் இருக்குமாறும் ஆசிரியர் எப்ராகிம் கூறிச் சென்றார்.
அவர் ஆற்றில் இறங்கி நடந்து சென்றபோது ஆழம் குறைவாக தெரிந்ததால், அவரைப் பின்தொடர்ந்து 8 பேர் ஆற்றில் இறங்கினோம். அப்போது, முழங்கால் அளவுக்கு தண்ணீர் இருக்கும்போதே திடீரென ஒவ்வொருவராக மூழ்கத் தொடங்கினர். இதில், 3 பேரை காப்பாற்றிய மாணவி சோபியா, 4-வது நபராக லாவண்யாவை காப்பாற்ற முயன்றபோது அவரும் தண்ணீரில் மூழ்கினார். நாங்கள் காப்பாற்றுமாறு அலறியும் அருகிலிருந்த யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என்றனர்.