Published : 17 Feb 2023 04:23 AM
Last Updated : 17 Feb 2023 04:23 AM

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்: ரூ.5 லட்சம் பொருட்கள் பறிப்பு

நாகப்பட்டினம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நம்பியார் நகர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் சரமாரியாக தாக்குதல் நடத்தி, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்துச் சென்றனர்.

நாகை நம்பியார் நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர், தனக்குச் சொந்தமான ஃபைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (21), மாதேஷ் (22), ஆகாஷ் (22), சின்னத்தம்பி(45), சிவபாலன்(20) ஆகியோருடன், பிப்.14-ம் தேதி நம்பியார் நகர் கடற்கரையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.

கோடியக் கரைக்கு கிழக்கே நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 3 ஃபைபர் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 12 பேர், நாகை மீனவர்களின் படகை சுற்றிவளைத்தனர்.

பின்னர், அவர்களில் 9 பேர் கத்தி, இரும்பு பைப், தடி ஆகியவற்றுடன் நாகை மீனவர்களின் படகில் ஏறி, அவர்களை சரமாரியாக தாக்கி, படகில் இருந்த 150 கிலோ மீன்கள், ஜிபிஎஸ் கருவி, வலைகள், 6 செல்போன்கள் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.

அதன்பிறகு, நாகை மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் புஷ்பவனம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். பின்னர், அவர்கள் நாகை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து நாகை கடலோர காவல் குழும போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x