Published : 23 May 2017 02:46 PM
Last Updated : 23 May 2017 02:46 PM

பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: வீரமணி

பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்கும் முயற்சியை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மோடி தலைமையிலான பாஜக சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்ற பெயருடனே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

வளர்ச்சி, வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், விவசாயிகளின் வாழ்வைப் பன்மடங்கு வளப்படுத்துவோம் என்றெல்லாம் தேர்தலில் கூறிவிட்டு, ஆட்சிக்குப் பெரும் பலத்தோடு வந்துவிட்ட பிறகு மதச் சார்பற்ற என்ற அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள ஆட்சிமுறையையே தூக்கி எறியும் வண்ணம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்து ஒற்றை ஆட்சிமுறையைக் கொண்டு வரும் வகையில், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் பணியையும் அடக்கமாகவும், அதேநேரத்தில் உறுதியாகவும் திட்டமிட்டே நடத்துகின்றது. பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள ஜனநாயகக் குடியரசினை மாற்றி இந்து ராஷ்டிரமாக்கிட அவ்வப்போது தொடர்முயற்சிகளை பல்வேறு ரூபத்தில் நடத்திட முயலுகின்றது.

பகவத் கீதை என்ற நூலை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்கிட வேண்டும் என்று பாஜகவின் எம்.பி. ரமேஷ் பிதுரி என்ற ஒருவர் தனி நபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மசோதா நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும், இதை அமலாக்காத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது.

அரசின் மதச்சார்பின்மை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா? சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது. கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் - காந்தியாரைக் கொன்ற கோட்சே, நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான்.

இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா? இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்.

பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு - கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x