

மெட்ரோ ரயில் பயண அட்டையில் ரீசார்ஜ் செய்வது, கட்டணம் மற்றும் வழித்தடம் விவரம், அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்களை பெறும் வகையில் செல்போன் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகளில் 28 கி.மீ. தூரம் பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர், லிஃப்ட் வசதி மற்றும் மெட்ரோ ரயிலில் ஏசி வசதி உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தினமும் சுமார் 25 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். எழும்பூர், சென்ட்ரல் மற்றும் அண்ணா சாலை வழித்தடங்களில் பணிகள் முடியும்போது, மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில், மெட்ரோ ரயில் இயக்க வழித்தட விவரம், மெட்ரோ ரயில்கள் வருகை - புறப்பாடு நேரம், ரயில் நிலையங்கள், பயணிகள் புகார் அளிப்பது உள்ளிட்ட வசதிகளை பயணிகள் பெறும் வகையில் ஒருங்கிணைந்த ‘ஆன்ட்ராய்டு செல்போன் செயலி’ (ஆப்) வசதி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை படிப்படியாக மேலும் அதிகரிக்கும்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் மெட்ரோ ஏசி ரயில் களில் பயணம் செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால், பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்ற பெயரில் புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் கட்டண விவரம், வழித்தடங்கள், பயண நேரம், அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் பேருந்து எண்கள், பாதுகாப்பு உதவி எண்கள், அட்டையில் ரீசார்ஜ் செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, பயணிகளுக்கான முக்கிய அறிவிப்புகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், சுற்றுலா இடங்கள் உள்ளிட்ட வசதிகளை பெறும் வகையில் ஆன்ட்ராய்டு ‘செல்போன் செயலி’ தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வசதிகளை மக்கள் செல்போன் மூலம் எளிமையாக பெற முடியும் என்றனர்.