

பல்வேறு சான்றுகள் கோரி ஆயிரக் கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால், சர்வர் வேகம் குறைந்து மாநிலம் முழுவதும் இ-சேவை மையங்கள் முடங்கியுள்ளன. இதனால் தங்களுக்கு தேவையான சான்றுகளை குறித்த நேரத்தில் பெறமுடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சார்பில் இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் அரசு கேபிள் நிறுவனம் சார்பில் 850 இ-சேவை மையங்கள், கூட்டுறவுத்துறை சார்பில் 4 ஆயிரம் மையங்கள், புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் மையங்கள், கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தின் மூலம் 1,400 மையங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்கள் மூலம் அரசின் 30-க்கும் மேற்பட்ட சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான சர்வரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பராமரித்து வருகிறது.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற 18 லட்சம் மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பிக்க ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் இந்த கல்வியாண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தொடக்க வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க 1 லட்சத்து 19 ஆயிரம் இடங்களை தமிழக அரசு அடையாளம் காட்டியுள்ளது.
கல்லூரி மற்றும் பள்ளி சேர்க்கையில் அரசின் சலுகைகளைப் பெற சாதிச் சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை பெற வேண்டியுள் ளது. இவற்றைப் பெற்றுத்தான் விண்ணப்பிக்கவே முடியும் என்ற நிலையில், ஆயிரக்கணக்கான பெற்றோர்களும், மாணவர்களும் அரசு இ-சேவை மையங்களை ஒரே நேரத்தில் அணுகி வருகின்றனர். இதனால் பல இ-சேவை மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஆபரேட்டர் களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. அதன் காரணமாக கடந்த சில தினங்களாக இ-சேவை மையங்களின் சர்வர் வேகம் குறைந்து, விண்ணப்பங்களை பதிவிடுவதில் சிக்கல் ஏற்பட்டு, அனைத்து மையங்களும் முடங்கியுள்ளன.
இதைக் கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறிய லிலும் ஈடுபட்டு வருகின்றனர். உரிய நேரத்தில் சான்றிதழ்கள் கிடைக்காததால், பெற்றோர்களும், மாணவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆபரேட்டர்களும், பெற்றோர்களிடம் விண்ணப் பங்களை வாங்காமல், பல்வேறு சான்றுகள் கோரி திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு இ-சேவை மையத் திலும் தினமும் அதிகபட்சமாக 40 விண்ணப்பங்களை ஏற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிக விண்ணப்பங்கள் வருவதால், சிரமத்துக்கு இடையில் தினமும் 120 விண்ணப்பங்கள் வரை பெற வேண்டியுள்ளது.
எங்களிடம் உள்ள சர்வர் ஒரு நிமிடத்துக்கு 300 விண்ணப்பங்களை ஏற்கும் திறன் உடையது. தற்போது அதிக அளவில் விண்ணப்பங்கள் வருவதால், சர்வரின் வேகம் குறைந்துவிடுகிறது. இதனால் விண்ணப்பங்களை ஏற்பதில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் நிமிடத்துக்கு 400 விண்ணப்பங்கள் வரை ஏற்கப்படுகின்றன.
இந்த கூட்டம் அடுத்த 20 நாட்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு ஒரு இ-சேவை மையத்துக்கு சராசரியாக 10 விண்ணப்பங்கள்தான் வரும். நாங்கள் சர்வரின் வேகத்தை அதிகரித்தால், ஆண்டின் மற்ற 345 நாட்களும் அது பயனின்றித்தான் இருக்கும். அதனால் சர்வர் வேகத்தை அதிகரிக்கவில்லை.
ஊரக மையங்களை அணுகலாம்
நாங்கள் ஆய்வு செய்ததில், தாலுகா அலுவலகங்களில் இயங்கும் இ-சேவை மையங்களில் மட்டுமே அதிக கூட்டம் வருகிறது. மற்ற மையங்களில் கூட்டமே இல்லை. அதனால் பொதுமக்கள் அவரவர் பகுதிக்கு அருகில் மற்றும் ஊரக அளவில் இயங்கும் இ-சேவை மையங்களை பயன்படுத்தலாம். இதன்மூலம் சேவைகளை எளிதில் பெறுவதுடன், தேவையற்ற சிரமங்களையும் தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.