Published : 25 May 2017 06:54 PM
Last Updated : 25 May 2017 06:54 PM

சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிடிவாரன்ட்டை ரத்து செய்யக் கோரி சூர்யா, சத்யராஜ், சேரன் உள்ளிட்ட 8 நடிகர்கள் தாக்கல் செய்த மனுவை ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர்கள் 8 பேரும் ஜூன் 17-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதில் பிடிவாரன்ட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

அந்த மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் உதகை நீதிமன்ற நீதிபதியின் ஆணையை செயல்படுத்த தடை விதித்துள்ளது. உதகை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியான சில மணிநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, 2009-ம் ஆண்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இந்த செய்தி நடிகைககள் குறித்து மிகவும் தரக்குறைவான தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது எனக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. பின்னர் அந்த செய்திக்கு நாளிதழ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் செய்தி வெளியானதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நடிகர்கள் உரையாற்றினர். அந்தக் கூட்டத்தின் போது பத்திரிக்கையாளர்கள் மீது தரக்குறைவான விமர்சனங்களை நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சேரன், விவேக், சத்யராஜ், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் முன் வைத்ததாக கூறி ரசாரியா என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ரசாரியா தொடர்ந்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ப்பட்டது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜராகி விலக்கு கோருமாறு நடிகர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இதனால் நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் நடிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து சம்மன்கள் அனுப்பப்பட்டும் நடிகர்கள் யாரும் ஆஜராகவில்லை.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் நீதிமன்றத்திலிருந்து பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.

பிடிவாரன்ட்டை ரத்து செய்யக் கோரி சூர்யா, சத்யராஜ், சேரன் உள்ளிட்ட 8 நடிகர்கள் ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர். நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டை ரத்து செய்யக் கூடாது என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை, பிடிவாரன்ட்டை ரத்து செய்யக் கோரி சூர்யா, சத்யராஜ், சேரன் உள்ளிட்ட 8 நடிகர்கள் தாக்கல் செய்த மனுவை ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர்கள் 8 பேரும் ஜூன் 17-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதில் பிடிவாரன்ட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அம்மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான பிடிவாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x