

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்க உள்ளதால் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கோடை காலம் தொடங்கி தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின்போதே அதிக வெப்பம் நிலவும்.
ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல இடங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவானது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குகிறது.
மே 4-ம் தேதி தொடங்கும் கத்திரி வெயில், மே 28-ம் தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்திலேயே கோடையின் உக்கிரம் முழுமையாக உணரப் படும்.
கடந்த ஆண்டுகளில் கத்திரி வெயிலின்போது 110 டிகிரி வரை வெயில் பதிவாகி இருந்தது. இந்தாண்டு கோடையின் தொடக்கத்திலேயே கடும் வெப்பம் நிலவியதால், கத்திரி வெயிலின்போது மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக மேகமூட்டமாக இருந்த காரணத்தால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்கு இதே நிலை நீடிக்கும். அதன் பிறகு மீண்டும் வெயில் அதிகரிக்கத் தொடங்கும்.
பொதுவாக கத்திரி வெயில் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுவதில்லை. மே மாதத்தில் சூரியனின் வெப்பக் கதிர்கள் தமிழகத்தின் மீது நேரடியாக வீசும். அதனால் வெயில் அதிகரிக்கும். இந்தாண்டும் மே மாதத்தில் அதிக வெப்பம் நிலவ வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.