

ஈரோடு கிழக்கில் அனுமதி பெறாத 14 ‘கூடாரங்களுக்கு’ சீல்: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிமனை என்ற பெயரில் கூடாரங்கள் அமைத்து வாக்காளர்களை, திமுகவினர் அடைத்து வைக்கப்படுவதாக அதிமுக சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இரு கட்சிகளின் சார்பிலும் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனைகளின் கூடாரங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முறையாக அனுமதி பெறாத தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதன்படி, திமுக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த 10 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல், அதிமுக சார்பில் நான்கு இடங்களில் செயல்பட்ட அனுமதி பெறாத தேர்தல் பணிமனைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் இரு கட்சிகளின் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
‘அரசு திட்டங்கள் மீதான விமர்சனங்களை புறந்தள்ளாதீர்கள்’: "அரசு அலுவலகங்களை பல்வேறு தேவைகளுக்காக நாடிவரும் மக்களிடம் நீங்கள் ஒவ்வொருவரும் கனிவாக, பொறுமையாக நடந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும்" என்று ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அரசு திட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளாமல், உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைந்திடவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
“வாக்காளர்களைக் கவர ஜனநாயக அத்துமீறலில் திமுக”: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக ஜனநாயக அத்துமீறல் நடந்துகொண்டிருப்பதாக திமுக மீது குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரத்திற்கு வரக் கூடாது என்பதற்காக, பொதுமக்களை குறிப்பாக வாக்காளர்களை ஆங்காங்கே சாமியானா பந்தல் போட்டு அடைத்துவைத்து, காலையில் 500 ரூபாய், பின்னர் அவர்களது வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள், ஆட்டிறைச்சி, மீன், சிக்கன் உள்ளிட்டவை வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், மாலையில் 500 ரூபாய் வழங்கப்படுகிறது” என்று அடுக்கடுக்காக புகார் தெரிவித்துள்ளார்.
‘சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டாஸ்’: விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தி.மலை ஏடிஎம் கொள்ளை: விசாரணை நிலவரம் என்ன?: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலை நான்கு ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற ரூ.73 லட்சம் கொள்ளை வழக்குகளில், திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் 2-வது முறையாக செய்தியாளர்களை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் வியாழக்கிழமை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஹரியாணா மாநில கொள்ளையர்கள் என்பதை மட்டும் முதற்கட்டமாக உறுதி செய்துள்ளோம். மறுக்க முடியாத ஆதாரங்கள் சிக்கி உள்ளன. விரைவில் விசாரணை முடிவுக்கு வரும். 3 இடங்களில் 10 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த கொள்ளை வழக்குகளில் இதுவரை யாரும் கைது செய்ப்படவில்லை. குற்றவாளிகளை அடையாளத்தை கண்டுபிடித்துவிட்டோம். குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட விவரங்களை விரைவாக வெளியிடுவோம்.
திருவண்ணாமலையில் இருந்து கோலார் சென்ற கொள்ளையர்கள், பின்னர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலமாக ஹரியாணாவுக்கு சென்றுள்ளனர். குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் வீடியோ கிடைத்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
திரிபுராவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பான நடைபெற்றது. முதல்வர் மாணிக் சாஹா அகர்தலாவில் உள்ள போரோடோவாலி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மக்கள் அதிகளவில் வாக்களிப்பதைப் பார்க்கும்போது வெற்றி வாய்ப்பு உறுதியாகிறது. தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்" என்றார்.
ராமர் பாலம் குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்பு: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்மா அடங்கிய அமர்வு இதனை தெரிவித்தது. தற்போது அரசியல் சாசன அமர்வின் முன் வேறு சில மனுக்கள் இருப்பதால், அவை முடிந்ததும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவோடு இணைவது பாகிஸ்தானுக்கு நல்லது: யோகி: இந்தியாவோடு விரைவாக இணைவது பாகிஸ்தானுக்கு நல்லது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ''இந்து என்பது ஒரு மதமோ, ஒரு நம்பிக்கையோ, ஒரு பிரிவோ கிடையாது. இந்து என்பது ஒரு கலாச்சார பெயர். இந்து அடையாளம் என்பது ஒவ்வொரு இந்தியருக்குமான கலாச்சார குடியுரிமை.
அதேபோல, ஆன்மிக உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான தனி அடையாளம் என்று ஏதுமில்லை. ஒன்று உண்மையானதாக இல்லாதபோது அது நீண்ட காலம் நீடிக்காது. அது இந்தியாவோடு விரைவாக இணைவது அதற்கு நல்லது. அகண்ட பாரதம் ஒரு உண்மை. எதிர்காலத்தில் அது நிகழும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிபிசி நிறுவனத்தில் 3-வது நாளாக சோதனை: டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை காலை 11.30 மணி அளவில் தங்கள் கணக்கு ஆய்வுப் பணிகளை தொடங்கினர். இந்த ஆய்வில், பரிமாற்ற விலை விதிகளை பிபிசி மீறி இருப்பது தெரிய வந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த சோதனை ஒரு நாளில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3-வது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.
4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம்: ஆசிரியர் கைது: கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர் ஜெபசேகயு எப்ராகிம் மீது மாயனூர் போஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.