மதுரை எய்ம்ஸ் | ஒருவர் கூட நிரந்தரப் பணியாளர் இல்லை; 8 பேர் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் வகுப்பு
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் வகுப்பு
Updated on
1 min read

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ஒரு நிரந்தர பணியாளர் கூட நியமிக்கப்படவில்லை. 8 பேர் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு 2015 பிப்.28-ம் தேதி அறிவித்தது. பல்வேறு இழுபறிக்குப் பிறகு, மருத்துவமனை அமைக்க 2018-ல் மதுரை தோப்பூர் தேர்வானது. 2019 ஜன.27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கே வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, திமுக எம்.பி.க்கள் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் பணிகள் தொடங்கி, 2028-ம் ஆண்டில்தான் முடிவடையும் என்று ஜப்பான் நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடந்து வருகின்றது. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ஒரு நிரந்தர பணியாளர் கூட நியமிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. சமீபத்தில், மக்களவையில் 3 உறுப்பினர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.

இதன்படி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 183 ஆசிரியர் பணியிடங்களும், 32 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் பணியிடங்களுக்கு இதுவரை ஒருவர் கூட நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை. 8 பேர் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூட யாரும் நியமிக்கப்படவில்லை. 32 பணியிடங்களும் காலியாகத்தான் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in