Published : 24 May 2017 11:54 AM
Last Updated : 24 May 2017 11:54 AM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு கண்டிக்கத்தக்கது: வேல்முருகன் குற்றச்சாட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைப் போன்ற முடிவுகளால் தமிழ்நாட்டை தனது காலனியாக மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் வரும் ஜூன் மாதம் கையெழுத்தாக இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அதாவது சென்னை ரயில்நிலைய பராமரிப்பு பணிகளையும் ரயில்நிலையத்தை ஒட்டி காலியாகக் கிடக்கும் நிலங்களையும் 45 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவு

ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து தெற்கு ரயில்வே ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

சென்ட்ரல் ரயில்நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முடிவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, ரயில்வே ஊழியர் சங்கங்களின் போராட்டத்திற்கும் ஆதரவைத் தெரிவிக்கிறது.

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 12 நடைமேடைகளும் அதன் புறநகர் ரயில்நிலையத்தில் 5 நடைமேடைகளும் என மொத்தம் 17 நடைமேடைகள் உள்ளன. இவற்றிலிருந்து நாள்தோறும் 100 எக்ஸ்பிரஸ் ரயில்கள்,200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் புழங்கும் ரயில்நிலையம் இது.

பயணிகளுக்கான அதாவது மக்களுக்கான சேவை மையமாக விளங்கும் இந்த ரயில்நிலையத்தை முழுக்க முழுக்க ஒரு வணிக நிறுவனமாக மாற்றிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது மத்திய மோடி அரசு.

அதன்படி, “மறுமேம்பாட்டுத் திட்டம்” என்பதன் பேரில் 3.42 ஏக்கர் நிலப்பரப்பில் சொகுசு விடுதி, உணவகம் மற்றும் பல்வேறு ஏற்பாடுகளுடன் கூடிய ஷாப்பிங் மால் கட்ட முடிவு செய்து தனியாரிடம் அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அதோடு ரயில்நிலையத்தைப் பராமரிக்கவும் ரயில்நிலைய வளாகத்தை ஒட்டி காலியாகக் கிடக்கும் பல ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் தனியார் நிறுவனத்திற்கு 45 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடவும் ஒப்பந்தம் போடப்பட்டு அது ஜூன் மாதம் கையெழுத்தாக இருக்கிறது.

இந்த நடவடிக்கைகள் இந்தியா முழுவதுமான மொத்த ரயில் சேவையையே தனியார்மயப்படுத்துவதன் ஒரு படிதான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்தியாவில் ரயில்வேத் துறையை ஏற்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சிதான். நம்மை காலனி நாடாக வைத்து ஆண்டுகொண்டிருந்த அந்த பிரிட்டானியர்களே அதை தனியாரிடம் தரவில்லை. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாகவும் அதைத் தனியாரிடம் விடும் எண்ணத்தை மத்தியில் வந்த எந்த அரசுமே கொண்டிருக்கவில்லை. அப்படியிருக்கையில் இந்த மோடி அரசு மாத்திரம் எதையும் தனியாரிடம் கொடுத்தவிடத் துடிப்பது ஏன்?

அதிலும் குறிப்பாக தமிழ்நாடு என்றால் மோடி அரசுக்கு ஒரு தனியான பார்வையே இருக்கிறது. அது தமிழர்களையும் தமிழ் நிலத்தையும் நாலாந்தரமாகவே பார்க்கும் பார்வை. தமிழர்களை அடிமையாகவே பார்க்கும் பார்வை. தமிழ்நாட்டை தனது காலனியாகவே வைத்திருக்க எண்ணும் பார்வை.

தமிழ் நிலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களை, அவை மத்திய அரசு சார்ந்தவையாக இருந்தாலும்கூட, அவற்றைப் பராமரிப்பது, பாதுகாப்பது என்பது தமிழக அரசின் உரிமையேயாகும். ஆனால் மோடி அரசு அவற்றை மத்திய அரசுக்கு மாத்திரமே உரித்தானவையாகக் கொண்டு தன் இஷ்டம்போல் தனியாருக்கு விட்டு தமிழர்கள் எந்தப் பயனும் அடைய முடியாதபடி பார்த்துக் கொள்ள முயற்சிக்கிறது.

மேலும் நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துக்குமே மக்கள்தான் உரிமையாளர்கள். மாநில அரசோ, மத்திய அரசோ, அல்லது மோடியோகூட அவற்றின் உரிமையாளர்களில்லை. அப்படியிருக்க பொதுமக்கள் மற்றும் அந்தத் துறையின் பணியாளர்கள் ஆகியோரின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் மாறாக ஒருசில தனியார்கள் மாத்திரமே கொழுப்பதற்கான நடவடிக்கைகளை மோடி எடுப்பது ஏன்?

அரசு என்பதே மக்களுக்குப் பணியாற்றுவதற்கான ஒரு அமைப்பு என்பதுதான் ஜனநாயகம். அதை விடுத்து வியாபாரம் செய்யும் பணியில் அரசு இறங்குவது ஏன்?அந்த வியாபாரத்தையும் தனியாரிடம் விட்டு, மக்கள் பணத்தை சூறையாட அவர்களை அனுமதிப்பது ஏன்?

நியூட்ரினோ, அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்களுக்குக் கேடான திட்டங்களை தமிழ் மண்ணிலேயே நிறுவுவது; அல்லது தமிழ் மண்ணில் ஏற்கனவே இருந்துவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பயன்பாட்டை தமிழர்களுக்குக் கிடைத்துவிடாதபடி கெடுப்பது என்ற நோக்கிலான ஒரு நடவடிக்கைதான் சென்ட்ரல் ரயில்நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு என்று குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

சரியாகச் சொல்வதென்றால், தமிழ்நாட்டை தன் காலனியாக மாற்றும் திட்டப்படியான ஒரு நடவடிக்கையே சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு என்றுதான் கருதவேண்டியிருக்கிறது.

இதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக இந்த முயற்சியைக் கைவிடுமாறு வலியுறுத்துவதாக வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x