

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், ஓராண்டில் அதிமுக இரண்டாக பிரிந்து கிடக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மே 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
இன்றுடன் ( மே 23- 2017) தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், "தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஓராண்டில் அதிமுக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சாதனைகளை விளக்க வேண்டும்.
ரஜினி எங்கள் கட்சிக்கு வந்தால் எங்களுக்கு கூடுதல் பலமே தவிர ரஜினி மட்டுமே பாஜகவின் பலம் அல்ல.
அரசியல் ஆதாயத்துக்காக திமுக விவசாயிகளைப் பயன்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளுக்காக மத்திய விவசாயத்துறை அமைச்சரை நான் சந்தித்துப் பேசியதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.