

சென்னையில் ஜூன் மாதம் நடக்கவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழாவில் கட்டாயம் பங் கேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 8 மாதங்களாக கோபாலபுரம் இல்லத்தி லேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். குடும்பத்தினர், கட்சியின் முக்கிய தலைவர்கள் தவிர வேறு யாரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இதற்கிடையில், கருணாநிதியின் 94-வது பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அவரது சட்டப்பேரவை வைர விழா கொண்டாடப்படுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். தாய் தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ‘‘கருணாநிதி தூங்கிக் கொண்டிருந்ததால் நேரில் சந்திக்க முடிய வில்லை. தாய் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து நலம் விசாரித்தேன். சென்னையில் ஜூன் 3-ம் தேதி நடக்கவுள்ள கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் கட்டாயம் பங்கேற்பேன்’’ என்றார்.
‘‘கட்சிப் பணிகளில் ஈடுபடு வீர்களா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இப்போது நான் கட்சியிலேயே இல்லையே’’ என்றார்.
தனது தம்பியும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திமுகவில் இருந்து அழகிரி கடந்த 2014-ம் ஆண்டு நீக்கப்பட்டார். அதன் பிறகு அரசியலில் இருந்து அவர் ஒதுங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.