Published : 16 Feb 2023 12:47 PM
Last Updated : 16 Feb 2023 12:47 PM
ஓசூர்: ஓசூர் பகுதியில் நடப்பாண்டில் முட்டைகோஸ் சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது.
ஒரே நேரத்தில் ஒரே பயிரை விவசாயிகள் சாகுபடி செய்வதைத் தவிர்க்க மாற்றுப் பயிர் சாகுபடிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் குறுகிய கால காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்ல விலையும்..சாகுபடி அதிகரிப்பும்: இப்பகுதிகளில் விளையும் காய்கறிகள் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், கேரள, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. கடந்தாண்டில் குறைந்தளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்திருந்த நிலையில், 100 கிலோ முட்டைகோஸ் ரூ.2 ஆயிரம் வரை விலை போனது.
இதனால், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நிகழாண்டில் அதிக பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி நடந்தது. தற்போது, முட்டை கோஸ் மகசூல் அதிகரித்து, விலை சரிந்துள்ளது. 100 கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை என்பதால் பல விவசாயிகள் அறுவடையைத் தவிர்ந்து, வயல்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதித்து வருகின்றனர்.
அதிக சந்தை வாய்ப்பு - இது தொடர்பாக விவசாயி வெங்கடேசப்பா கூறியதாவது: கீரை வகையைச் சார்ந்த முட்டை கோஸுக்கு ஆண்டு முழுவதும் தேவை அதிகம் இருக்கும் என்பதாலும், சந்தை வாய்ப்பு அதிகம் என்பதால் ஓசூர் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் முட்டை கோஸை சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும், கடந்தாண்டு முட்டைகோஸுக்கு நல்ல விலை கிடைத்ததால், பல விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்தனர். தற்போது, மகசூல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மகசூலுக்கு ஏற்ப விலை: காய்கறியைப் பொறுத்த வரையில் மகசூலுக்கு ஏற்ப சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அதிக பரப்பில் சாகுபடி நடந்தால், சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை குறைகிறது. எனவே, விவசாயிகள் ஒரே நேரத்தில் ஒரே பயிரைச் சாகுபடி செய்யாமல் லாபம் கிடைக்கும் வகையில் மாற்றுப் பயிரைச் சாகுபடி செய்ய தோட்டக் கலை துறையினர் உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT