

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் புதுச்சேரி, காரைக்காலில் தொடர்ந்து குறைந்து வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 8.4 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமே தாமதமாக நடைபெறும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 54 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக அரசு பாடத்திட்டமே பின்பற்றப்படுகிறது. தமிழக அரசு எடுக்கும் முடிவுகளே இங்கும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
கடந்த 2014-ல் 82.12 சதவீத தேர்ச்சியானது 4.63 சதவீதம் கடந்த 2015-ல் குறைந்து 77.49 சதவீதமானது. அதைத்தொடர்ந்து 2016-ல் 77 சதவீதமானது. தற்போது மீண்டும் 3.3 சதவீதம் குறைந்து 73.7 சதவீதமாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 8.42 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
குறிப்பாக புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட 2.44 சதவீதமும், காரைக்காலில் கடந்த ஆண்டை விட 6.23 சதவீதமும் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஒரு பள்ளிகூட நூறு சதவீத தேர்ச்சி பெறவில்லை. அரசு பள்ளி நல்ல முறையில் இயங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சதவீத சரிவு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
"புதுச்சேரியில் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. பல போராட்டங்கள் நடத்தினோம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நிரப்பினர். ஆனால், தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் குறைந்துதான் வருகிறது. காரைக்காலில் நிலையோ மிக மோசமாகியுள்ளது. தேர்ச்சி விகிதம் மிக குறைந்த பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்" என்று பெற்றோர் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் துளசி, ‘தி இந்து'விடம் கூறியதாவது: அரசு பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு முக்கியக் காரணம் தாமதமாக நடந்த இடமாறுதல் கலந்தாய்வுதான். குறிப்பாக 50 சதவீத பணியிட கலந்தாய்வு காலாண்டு தேர்வின் போதே நிறைவடைந்தது. ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வை பள்ளி தொடங்கும் முன்பு நடத்த கோரியிருந்தோம். அவ்வாறு நடக்காதது ஒரு முக்கியக் காரணம். இம்முறையும் மே மாதத்திலேயே கலந்தாய்வு நடத்தக்கோரி ஆளுநர், முதல்வர், கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து காத்திருக்கிறோம்.
மேல்நிலைக் கல்வியில், அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கையை கல்வித்துறை தாமதமாக நடத்துகிறது. அதையும் தவிர்க்க வேண்டும். அரசு பள்ளிகளில் அனைத்து வித மாணவர்களையும் சேர்த்து கொண்டு கல்வி கற்று தருகிறோம். மாணவர்கள் முழு தேர்ச்சி பெற முயற்சிகள் எடுக்கிறோம். பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் பலவித படிப்புகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், புதுச்சேரியில் அதுபோன்ற நிலை இல்லை. கற்கும் திறனுக்கு ஏற்ப சிறப்பு ஏற்பாடுகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் காலிப்பணியிடங்களையும் அரசு நிரப்ப வேண்டும். தற்போது 200 காலிப் பணியிடங்கள் உள்ளன" என்று குறிப்பிட்டார்.
இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "கல்வித்தரத்தை உயர்த்த கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்" என்றார்.