Published : 16 Feb 2023 04:10 AM
Last Updated : 16 Feb 2023 04:10 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தலைமை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு குழுக்கள், பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தலைமை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சென்னை தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பங்கேற்றார்.

அதேபோல், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு வழங்குதல், தேர்தல் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x