Published : 16 Feb 2023 07:38 AM
Last Updated : 16 Feb 2023 07:38 AM
சென்னை: ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி, வரும் 21-ம் தேதி அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) அறிவித்துள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 31 பணிமனைகள், 2 தொழிற்கூடங்கள் உள்ளன. தினமும் 3,400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து பணிமனைகளிலும் பார்க்கிங் பணி, பழுது சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, பணிமனை ஓட்டுநர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைக் கைவிடுமாறு ஏற்கெனவே கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும், முற்றுகைப் போராட்டமும் நடத்தினோம்.
ஓய்வு வயதை அதிகரித்துள்ளதால், முதுமையடைந்த ஓட்டுநர்களால் வழித்தடத்தில் பணி செய்ய முடியவில்லை. எனவே, அனைத்து பணிமனைகளிலும் சீனியாரிட்டி அடிப்படையில், பேருந்து ஓட்டுநர்களுக்கு பணிமனை ஓட்டுநர் பணியை வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் (சிஐடியு) கூறும்போது, “ஒப்பந்த முறையில் ஓட்டுநர் நியமனத்தைக் கொண்டு வருவதற்கு வழிவகை செய்யும் அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் வரும் 21-ம் தேதி, மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெறும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT