செங்கை கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

செங்கை கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: கோகுல்ஸ்ரீயின் தாயார் பிரியாவுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவன் கோகுல்யை கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கொலை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவரது தாயார் பிரியாவுக்கு அரசு வேலையும் ரூ.50 லட்சம்நிவாரணமும் வசிப்பதற்கு வீடும் வழங்கவேண்டும். அனைத்து கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்ய வேண்டும், சிறுவன் கோகுல்ஸ்ரீ வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் பாரபட்சமின்றி சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பிரியாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒன்றையும் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். மேலும், கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவையும் முதல்வர் அமைத்துள்ளார்.

இதனிடையே முதல்வரின் உத்தரவுப்படி ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் குடியிருப்பு ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை செங்கை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் பிரியாவிடம் அண்மையில் வழங்கினார்.

நன்றி தெரிவிப்பு: இந்நிலையில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்த சிறுவனின் தாயார் பிரியா அவருக்கு நேற்று நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியது: பிரியாவுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரியாவை கடத்திச் சென்று சித்ரவதை செய்த சிவக்குமார் உள்ளிட்ட 4 குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கூர்நோக்கு இல்லங்களில் மரணங்கள் நிகழாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பிரியா கூறும்போது, ‘இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்,’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in