

சென்னை: சுகாதார கேடுகளைப் பொருட்படுத்தாமல் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை கட்டுப்படுத்தும் விதிகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு துறைகளுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மதுரவாயல் ஏசிஎஸ் பல் மருத்துவக் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் தனியார் கழிவுநீர் லாரிகள் தொடர்ந்து பட்டப் பகலில் கழிவுநீரை திறந்துவிட்டு மாசுபடுத்துகிறது என நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
இதேபோன்று மேலும் இரு இடங்களில் தனியார் லாரிகள் கழிவுநீரை திறந்துவிடுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. அவற்றின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து, 3 தனித்தனி வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடந்த மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழிவுநீர் மேலாண்மை தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னைப் பெருநகர குடிநீர்வழங்கல், கழிவுநீர் அகற்றல் சட்டம்2022-ன் கீழ் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அது கடந்த ஜன.2முதல் அமலுக்கு வந்துள்ளது.
விதிகளை மீறினால் முதல் குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம், 2-வதுமற்றும் அதற்கடுத்த குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்புடைய வாகனம் மற்றும் விதிகளை மீறி கழிவுநீரை திறந்துவிட பயன்படுத்திய உபகரணங்கள் அனைத்து பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் நேற்று வழங்கினர். அதில், “இந்த விதிகளை சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நகராட்சி நிர்வாகம், குடிநீர்வழங்கல் துறை, பேரூராட்சிகள் இயக்குநர் ஆகியோர் செயல் படுத்தினால் கழிவுநீரால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க முடியும். எனவே,சுகாதார கேடுகளை பொருட்படுத்தாமல் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை கட்டுப்படுத்தும் விதிகளை இத்துறைகள் கண்டிப்பாகநடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.