Published : 16 Feb 2023 06:55 AM
Last Updated : 16 Feb 2023 06:55 AM
சென்னை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை தினந்தோறும் விசாரித்து 2 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டுமென பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ்பக்ரூதின் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக ஆடிட்டர் ரமேஷின் தாயார் வி.கமலா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் “எனது மகன் ரமேஷ் 1978-ம் ஆண்டு முதல் ஆர்எஸ்எஸ்-ல்நிர்வாகியாக இருந்து அதன்பிறகு பாஜக நிர்வாகியாக செயல்பட்டார். கடந்த 2013-ம்ஆண்டு எனது மகனை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலை செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2014-ம்ஆண்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சிக்கு தற்போது 80 வயதாகிறது. எனக்கு 91 வயதாகிறது. எனது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரிக்கஉத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக விசாரணைக்கு வந்தது. ‘‘இந்த வழக்கு கவுன்சிலிங் என்ற பெயரில் குறைந்தது 50 முறையாவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன வகையான கவுன்சிலிங், யாருக்காக கவுன்சிலிங் என எந்தவிவரமும் இல்லை.
இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமென மனுதாரர் கோருவது நியாயமானது. எனவே ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாரணையை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து 2 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT