

நத்தம்: புகையிலைப் பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் 490 காளைகள் களமிறக்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 25 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அண்மையில் கொசவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. மாவட்டத்தில் முதல் முறையாக இப்போட்டியில் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டனர். நேற்று காலை கால்நடைத் துறையினர் பரிசோதனைக்கு பின்பு காளைகள் வாடிவாசல் வழியாக களமிறக்கப்பட்டன.
அதேபோல், மாடுபிடி வீரர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் சந்தனமேரி கீதா முன்னிலையில் கோட்டாட்சியர் பிரேம் குமார் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 490 காளைகள் களமிறக்கப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் 214 பேர் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பிரிட்ஜ், சில்வர் பாத்திரம், பானை, கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 25 பேர் காயமடைந்தனர்.
இதில் படுகாயமடைந்த 4 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டிஎஸ்பி இம்மானுவேல் சேகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.