Published : 16 Feb 2023 04:13 AM
Last Updated : 16 Feb 2023 04:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி மேல் அழிஞ்சப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா(40). திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வருமானத்தில் குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனக்கு சொந்தமான வாத்துகளை மேய்ச்சலுக்காக பாகூர் அடுத்த சேலியமேடு பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அங்கு நெல் பயிரிடுவதற்காக விவசாய நிலத்தை உழுது வைத்திருந்தனர். அந்த நிலத்தில் தண்ணீர் தேங்கிய பகுதியில் வாத்துகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
அங்கு இரைதேடி மேய்ந்து கொண்டிருந்த வாத்துகள் சிறிது நேரத்தில் ஒவ்வொன்றாக திடீரென மயங்கி விழுந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனா அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இதுகுறித்து அவர்கள் பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது 400-க்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்து கிடந்தன.
இறந்த வாத்துகளை பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். வயல் வெளியில் பறவைகளை வேட்டையாட விஷமருந்தை யாரேனும் வைத்து, அதனை வாத்துகள் தின்றதனால் இறந்தனவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT