

குவாஹாட்டியில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.45 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய பர்மா நிலப்பரப்பு எல்லை வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்ககத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் குவாஹாட்டியில் இருந்து சென்னை வந்த ரயில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அதிலிருந்து இறங்கி வந்த 2 பயணிகள் வைத்திருந்த பைகள் அதிக எடையுடன் இருப்பதைக் கண்டனர்.
சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்த பிறகும் அதன் எடை அதிகமாகவே இருந்தது. பை கிழித்துப் பார்த்தபோது தங்கக் கட்டியை உடைத்து மெல்லிய தகடுபோல மாற்றி பிளாஸ்டிக் பையில் சுற்றிவைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
மொத்தம் 8 கிலோ 330 கிராம் எடையுள்ள தங்கம் சிக்கியது. அதன் மதிப்பு ரூ.2 கோடியே 45 லட்சம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்த டி.எல்.தாரா, எல்.கே.ஜோ ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.