முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட் பெற செயலியை பயன்படுத்த ரயில் பயணிகளுக்கு அழைப்பு

முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட் பெற செயலியை பயன்படுத்த ரயில் பயணிகளுக்கு அழைப்பு
Updated on
1 min read

சேலம்: ரயில் பயணத்துக்கான முன்பதிவில்லா டிக்கெட், பிளாட் பாரம் டிக்கெட் உள்ளிட்டவற்றை செல்போன் செயலியை பயன்படுத்தி பெறலாம், என சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ரயில்வேயில், முன்பதிவில்லா டிக்கெட்களை செல்போன் செயலி மூலம் பெற்றுக் கொள்ளும் முறை செயல்பாட்டில் உள்ளது. இதற்கான ‘யு.டி.எஸ்’ எனும் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் முன்பதிவில்லா டிக்கெட், சீஸன் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட், சீஸன் டிக்கெட் புதுப்பித்தல் உள்ளிட்ட வசதிகளை சில விநாடிகளில் செய்து கொள்ள முடியும்.

ரயில் நிலையத்தில் இருந்து, 15 மீட்டர் முதல் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த செயலி மூலம் டிக்கெட்களை பெற முடியும். ரயில் நிலையங்களில் உள்ள ‘க்யூஆர் கோடு’-ஐ ஸ்கேன் செய்தும் டிக்கெட்களை பெற முடியும். இந்த செயலியை ரயிலில் பயன்படுத்த முடியாது. வாலட், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை கொண்டு செயலியில் தொகையை ரீ- சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

சேலம் ரயில்வே கோட்டத்தில், 13 தானியங்கி டிக்கெட் மெஷின்கள் நிறுவப்பட்டுள்ளன. புதிதாக 12 மெஷின்கள் நிறுவப்பட உள்ளன. இதில் பயணிகள் நேரடியாக டிக்கெட் எடுத்துக் கொள்ள முடியும் அல்லது அங்குள்ள தன்னார்வலரிடம் டிக்கெட்களை பெற முடியும். ரயில்வே வாலட் ரீசார்ஜ் செய்யும் போது மற்றும் ஏடிவிஎம் ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் செய்யும் போது 3 சதவீதம் போனஸ் கிடைக்கும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in