புகார்தாரர் அலைக்கழிப்பு: குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கி உத்தரவு- காவல் ஆணையர் நடவடிக்கை

புகார்தாரர் அலைக்கழிப்பு: குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கி உத்தரவு- காவல் ஆணையர் நடவடிக்கை
Updated on
1 min read

செயின் பறிப்பு வழக்கில் புகார்தாரரை அலைக்கழித்ததாகக் கூறி திருவேற்காடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அம்பத்தூர் அருகே உள்ள பாடி பகுதியை சேர்ந்தவர் ஹெலன் கிரிஸ்டியனா (30). இவர், போரூர் அடுத்துள்ள ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழில் நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். 2 நாட்கள் முன் பணிக்கு சென்ற ஹெலன் கிரிஸ்டியனா இரவு பணிமுடிந்து, இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மதுரவாயல் அருகே இரும்புலியூர் - புழல் புறவழி சாலையின் அணுகு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.

இச்சம்பவத்தில், கழுத்தில் பலத்த காயமடைந்து, நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஹெலன் கிரிஸ்டியனா சென்னை, அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

செயின் பறிப்பு குறித்து கிறிஸ்டியனாவின் உறவினர்கள் திருவேற்காடு காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன், சம்பவம் நடந்தது தங்கள் எல்லைக்குள் வராது என அலைக்கழித்துள்ளார். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனுக்கு தகவல் சென்றது. இதைத் தொடர்ந்து பணியில் மெத்தனமாக இருந்ததாகவும், புகார்தாரரை அலைக்கழித்தாகவும் கூறி ஆய்வாளர் ஜெயச்சந்திரனை பணி இடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in