Published : 16 Feb 2023 11:36 AM
Last Updated : 16 Feb 2023 11:36 AM
தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறியிருப்பது நம்பத் தகுந்ததாக இல்லை என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் முன்னிலையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். கவிஞர் காசி ஆனந்தன், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவைப் பெற்று, இலங்கைத் தமிழர்களின் அரசியல், இறையாண்மை மற்றும் உரிமைகளை மீட்கப் போவதாக அறிவித்து செயல்பட்டு வருபவர்.
இவரது நிலைப்பாட்டை தமிழகத்தில் உள்ள பல தமிழீழ ஆதரவு அமைப்புகள் ஆதரிக்கவில்லை. மேலும், பழ.நெடுமாறனின் அறிக்கையில், இலங்கையில் சீனா காலூன்றுவதையும், சீனாவால் இலங்கை வழியாக இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுவதையும் தடுக்க பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், பாஜகவை ஆதரித்து இலங்கைத் தமிழர்கள் உரிமைகளை மீட்கலாம் என்ற திட்டத்தை வலியுறுத்துகிறார் எனத் தெரிகிறது. தக்க சான்றுகள் இல்லாமல், பிரபாகரன் வரப் போகிறார் என அவர் கூறுவதை, அப்படியே ஏற்று ஏமாற வேண்டியதில்லை. அந்த அறிவிப்பு, நம்பத் தகுந்ததாகவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT