நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே 2 மாதத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கும்

நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே 2 மாதத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கும்
Updated on
1 min read

நேரு பூங்கா - சென்னை சென்ட்ரல் இடையே அடுத்த 2 மாதங்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுரங்கப்பாதை வழியாக மட்டும் 24 கி.மீ. தொலைவுக்கு ரயில் இயக்கப்படவுள்ளது. 2 வழித் தடத்திலும் இதுவரை 28 கி.மீ. பணிகள் முடிந்து மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது.

மெட்ரோ ரயில்களில் தற்போது ஓரளவுக்கு மக்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது. இருப்பினும் எழும்பூர், சென்ட்ரல் மற்றும் அண்ணாசாலையை இணைக்கும் போதுதான் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். எனவே, இதற்கான பணிகளில் மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் அடுத்தகட்டமாக நேரு பூங்காவில் இருந்து சென்ட்ரல் வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் முக்கியமானது என்பதால் மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களைவிட பெரிய அளவிலும் ஷாப்பிங் மால், பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட கூடுதல் சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடத்தில் இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள் ளன. இன்னும் 2 மாதங்களில் இந்தத் தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கும். இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, இந்தத் தடத்தில் மெட்ரோ ரயில் இயக்க அனுமதி அளிப்பார். எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in