

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள 6 ஆறுகள், சமவெளிகளை இணைத்து அணைக்கட்டுகள் மூலம் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் நீர் பங்கிடப்படுகிறது.
இதுகுறித்து பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தற்போதுள்ள பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பங்கீடு ஒப்பந்தத்தை தமிழ்நாடு தொடர்ந்து மீறி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் போக்கு கவலை அளிக்கிறது.
எனவே, இத்திட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது குறித்து தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும். ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளை இருதரப்பினரும் பின்பற்றினால் மட்டுமே பிரச்சினைகள் ஏதும் எழாது. மேலும், இந்த ஒப்பந்தத்தை அவ்வப்போது மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். எனவே, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதியை தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.