

கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு மூலம் பல்வேறு பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 பேரின் பணி நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
2001-ம் நடந்த தேர்வில் பங்கேற்றவர்களில் 91 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்தெடுக்கப்பட்டனர். அவர் களில் 24 பேர் துணை ஆட்சி யர்களாகவும், 20 பேர் டி.எஸ்.பி.க்களாகவும், 10 பேர் வணிக வரித் துறை அதிகாரிகளாகவும், 33 பேர் கூட்டுறவு துணைப் பதிவாளராகவும் பல பணிகளில் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த 91 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரி ஏ.பி.நடராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இவர்களை அதிகாரிகளாக தேர்வு செய்ததில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக நடராஜன் தனது மனுவில் கூறியிருந்தார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விதிமுறைகளுக்கு மாறாக விடைத்தாளில் ஸ்கெட்ச் பேனா மற்றும் பென்சில் பயன்படுத்தியது, இரண்டு வண்ண மைகளைப் பயன்படுத்தியது, சில வழிபாட்டுச் சின்னங்களை விடைத்தாளில் எழுதி வைத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களில் எஸ்.விசாகன், சி.சியாமளாதேவி, ஆர்.பாண்டியராஜன், கே.கிங்ஸ்லின், கே.பிரபாகர், டி.பத்மாவதி, எம்.ஜெயராமன் மற்றும் கே.வரதராஜன் ஆகிய 8 பேர் தவிர மற்ற 83 பேரின் பணி நியமனம் செல்லாது என்று கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை இப்போது உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
வெளிப்படைத் தன்மை வேண்டும்:
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான மணிகண்டன் வதன், டி.என்.பி.எஸ்.சி. பணி நியமனங்களில் நடைபெறும் பல குளறுபடிகளும், வெளிப் படைத்தன்மை இல்லாததும்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குப் பிறகாவது பணி நியமனங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மணிகண்டன்.